பயணிகள் நெருக்கடி இல்லாமல் செல்ல கோவை ரெயில் நிலையத்தில் 3-வது சுரங்கப்பாதை திறப்பு


பயணிகள் நெருக்கடி இல்லாமல் செல்ல கோவை ரெயில் நிலையத்தில் 3-வது சுரங்கப்பாதை திறப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:07 PM GMT (Updated: 5 Feb 2019 10:07 PM GMT)

கோவை ரெயில் நிலையத்தில் பயணிகள் நெருக்கடி இல்லாமல் செல்ல 3-வது சுரங்கப்பாதை திறக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை ரெயில்நிலையத்தில் இருந்து சென்னை, நாகர்கோவில், கேரளா, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதில், ஆயிரக் கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதன் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் (பிளாட்பாரம்) உள்ளன. இந்த நடைமேடைகளுக்கு செல்ல ரெயில்நிலைய பிரதான நுழைவு வாயிலில் 20 அடி அகலத்தில் உள்ள 2 சுரங் கப்பாதைகளை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சுரங்கப்பாதையில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் தங்களின் உடைமைகளை தூக்கிக்கொண்டு செல்ல அவதிப்பட்டு வந்தனர். எனவே அங்கு புதிய சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பழைய சுரங்கப்பாதை அருகே இருந்த தகவல் மையம் மற்றும் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறைகளை இடித்து அகற்றி விட்டு ரூ.20 லட்சம் செலவில் 10 அடி அகலத்தில் 3-வது சுரங்கப்பாதை அமைக் கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது.

இதையடுத்து புதிய சுரங்கப்பாதை பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. நடைமேடைக்கு செல்ல புதிய சுரங்கப்பாதை திறக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story