போலி சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ்.படித்த மாணவிக்கு முன்ஜாமீன் - 2 வாரம் வேலூர் தாலுகா போலீசில் கையெழுத்திட ஐகோர்ட்டு உத்தரவு


போலி சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ்.படித்த மாணவிக்கு முன்ஜாமீன் - 2 வாரம் வேலூர் தாலுகா போலீசில் கையெழுத்திட ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Feb 2019 4:45 AM IST (Updated: 6 Feb 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ்.படித்த மாணவிக்கு முன்ஜாமீன் வழங்கி 2 வாரம் வேலூர் தாலுகா போலீசில் கையெழுத்திட ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ். படித்த மாணவி தாலுகா போலீஸ் நிலையத்தில் 2 வாரம் தொடர்ந்து கையெழுத்திடும்படி முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருநின்றவூர், தென்றல் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவரது மகள் வைஷ்ணவி. இவர் கடந்த 2008-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்துவிட்டு 2008-2009-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கவுன்சிலிங் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாணவி வைஷ்ணவி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். வழக்கமாக மாணவ, மாணவிகள் படிப்பில் சேர்ந்ததும் அவர்கள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்த கல்விச்சான்றிதழ்கள் சரிபார்ப்பதற்காக அனுப்பப்படும். அதன்படி அனைத்து மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களும் சரிபார்ப்பதற்காக சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு சான்றிதழ் சரிபார்த்தபோது மாணவி வைஷ்ணவியின் மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது. அவருடைய மதிப்பெண் சான்றிதழில் இயற்பியல் பாடத்தில் 183 மதிப்பெண் என்பதை 188-ஆகவும், வேதியியல் பாடத்தில் 160 என்பதை 190-ஆகவும் மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவி வைஷ்ணவி 2012-2013-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். முடித்து சென்றுவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி இயக்குனரக அலுவலகம் உத்தரவிட்டது.

வைஷ்ணவியுடன் 2012-2013-ம் கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். முடித்தவர்களுக்கு 2014-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் வைஷ்ணவிக்கு மட்டும் எம்.பி.பி.எஸ். முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. மேலும் மாணவி வைஷ்ணவி பிளஸ்-2 சான்றிதழை திருத்தியது குறித்து அவர் மீது மருத்துவக்கல்லூரி டீன் உஷாசதாசிவம், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர்.

உயர்கல்வி இயக்குனரகம் மற்றும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கும் மாணவி வைஷ்ணவியின் மதிப்பெண் சான்றிதழ் கேட்டு போலீசார் தபால் அனுப்பியிருந்தனர். இதனை அறிந்த வைஷ்ணவி சென்னை ஐகோர்ட்டில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த ஐகோர்ட்டு மாணவி வைஷ்ணவிக்கு நிபந்தனைகளுடன், 2 வாரத்திற்கு வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து கையெழுத்து போடவேண்டும் என்று உத்தரவிட்டு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


Next Story