கடலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


கடலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Feb 2019 3:49 AM IST (Updated: 6 Feb 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர், 

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கடலூர் மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பயிற்சி பள்ளி வாகனங்கள் விழிப்புணர்வு பேரணி பாரதிசாலை, அண்ணாபாலம் வழியாக சென்று இம்பீரியல் சாலையில் முடிவடைந்தது. பேரணியில் சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

முன்னதாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர், ஹெல்மெட் வழங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விபத்தினால் உயிரிழப்பு குறைந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு விபத்தில் 273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு (2018) 173 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்து மற்றும் உயிரிழப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். பேரணியில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) முக்கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், செல்வம், வெங்கடகிருஷ்ணன், ராஜேஷ்கண்ணா, மீனாகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story