சிவகங்கையில் பட்டப்பகலில் பயங்கரம்: அரசு கல்லூரியில் மாணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு சக மாணவர்கள் 3 பேர் வெறிச்செயல்


சிவகங்கையில் பட்டப்பகலில் பயங்கரம்: அரசு கல்லூரியில் மாணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு சக மாணவர்கள் 3 பேர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 6 Feb 2019 5:30 AM IST (Updated: 6 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அரசு கல்லூரியில் மாணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜீத் ராஜ் (வயது 19). இவர் சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் 2–ம் ஆண்டு படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது சக மாணவர்கள் சமாதானம் செய்து 2 பேரையும் அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் அஜீத் ராஜா கல்லூரிக்கு வந்தார். அப்போது கல்லூரி வளாகத்திற்குள் வைத்து 3 மாணவர்கள் சேர்ந்து அவரை வழிமறித்தனர். மேலும் கண்இமைக்கும் நேரத்தில் 3 பேரும் அஜீத் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்து நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை அறிந்து மற்ற மாணவர்கள் அலறினர். பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

உயிருக்கு போராடிய அஜீத்குமாரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி வளாகத்தில் மாணவர், சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மாணவ–மாணவிகள் வகுப்புகளை விட்டு வெளியேறி, தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர் அழகர், சப்–இன்ஸபெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முன்விரோத தகராறில் அஜீத் ராஜாவை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக மகாதேவன், சதீஸ், ராஜாமணி ஆகிய 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


Next Story