காட்டுமன்னார்கோவில் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவன் சாவு


காட்டுமன்னார்கோவில் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவன் சாவு
x
தினத்தந்தி 6 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கொத்தனார். இவரது மனைவி சிலம்பரசி. இவர்களுக்கு தனபிரபு(7), அரிகரன்(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். தனபிரபு அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் காலை மணிகண்டன் அதே பகுதியில் நடந்த கட்டிட வேலைக்கு சென்றார். இதற்கிடையே மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் தனபிரபுவும் கட்டிட வேலை நடந்த இடத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வேலை முடிந்ததும் மணிகண்டன், தனபிரபுவை தேடி பார்த்தார். அப்போது அவன் அங்கு இல்லாததால், மகன் வீட்டுக்கு சென்று இருப்பான் என நினைத்து அவர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் வீட்டிலும் தனபிரபு இல்லை. இதனால் மணிகண்டனும், அவரது உறவினர்களும் கட்டிட வேலை நடந்த இடத்துக்கு சென்று மகனை தேடி பார்த்தனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் தனபிரபு கிடந்தான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் தனபிரபுவை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் தனபிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மணிகண்டன், காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story