மக்களின் சிரமங்கள் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


மக்களின் சிரமங்கள் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Feb 2019 4:45 AM IST (Updated: 6 Feb 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

‘‘மக்கள் படும் சிரமங்கள் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை’’ என்று பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட வேந்தோணி கிராமத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அங்கு கூடியிருந்த பெண்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, 100 நாள் வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

கிராமங்கள் தான் கோவில்கள் என மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார். அதன்படி உங்களை கோவிலாக நினைத்து உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டு பிள்ளையாக வந்துள்ளேன். தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. கிராமங்களில் இருந்து சேவை செய்ய முடிவு எடுத்துள்ளேன். உங்கள் குறைகளை எடுத்துச்சொல்லி, முடிந்த அளவு நிவர்த்தி செய்ய இங்கு வந்துள்ளேன்.

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்பி ஏராளமான பெண்கள் இந்த கூட்டத்துக்கு வந்துள்ளீர்கள். உங்கள் குறைகளை அதிகாரிகளிடம் சொல்லி நிறைவேற்றுவேன். முடியாதவற்றை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் செய்து கொடுப்போம்.

பரமக்குடி தொகுதி உள்பட 18 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக அந்த தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்ததால்தான் இந்த ஆட்சி தப்பியது. இன்னும் ஒரு வாரத்தில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அது வந்து விட்டால் இந்த ஆட்சி முடிந்து விடும்.

தி.மு.க. ஆட்சியில்தான் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்பு தெளிச்சாத்த நல்லூரில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– தண்ணீர் இல்லாத காடு, தண்டனை ஏரியா என்று அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை பத்து மாதத்தில் செயல்படுத்தி இந்த மாவட்ட மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்தது தி.மு.க. அரசு. அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து அந்தப் பணிகளை மேற்கொண்டேன். அ.தி.மு.க. ஆட்சி அதை முறையாக பயன்படுத்தவில்லை. தலைவர் கருணாநிதி சென்று கொடி ஏற்றாத கிராமங்கள் இல்லை. அவருக்கு அடுத்து அந்த பணியை மேற்கொண்டது நான் தான். மக்களைப் பற்றியும் அவர்கள் படும் சிரமங்கள் பற்றியும் ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

தற்போது உள்ள ஆட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் நாங்கள் மக்களை சந்திக்க அவசியம் இருந்திருக்காது. உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த அரசால் இயலவில்லை.

மோடி நம் நாட்டின் பிரதமர். அவர் டெல்லியில் இல்லாமல் உலகத்தை சுற்றுகிறார். தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றை அவர் நிறைவேற்றி இருக்கிறாரா? பொய் சொல்லி ஆட்சி நடத்துகிறார்.

சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கியவர் எடப்பாடி. இந்த ஆட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். ஜெயலலிதா இறந்த போது கண்ணீர் வடித்த அமைச்சர்கள் மீண்டும் அவர்கள் பதவியேற்றபோது அழுதார்களா? தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சு.ப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, முன்னாள் எம்பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


Next Story