கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்: கள்ளழகர் கோவில் பகுதியில் மது அருந்த தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளழகர் கோவில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். அப்பகுதியில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
மதுரையின் சிறப்பு மிக்க கோவில்களில் கள்ளழகர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு சொந்தமாக பல மண்டகப்படிகளும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன.
ஆனால் இவை முறையாக பராமரிக்கப்படவில்லை. அதனால் கோவிலின் சொத்துகள் பல்வேறு தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை முறையாக பராமரித்தாலே, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கள்ளழகர் திருவிழாவை கோவில் நிர்வாகமே சிறப்பாக கொண்டாடலாம்.
எனவே கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்கவும், அடிப்படை வசதிகளை செய்துதரவும், வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை கோரி, கடந்த நவம்பர் மாதம் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், அழகர்கோவில் பகுதியில் இருக்கும் விடுதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் மாறி வருகிறது. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இங்கு மது அருந்துபவர்களால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், “மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான பகுதிகளில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. கள்ளழகர் கோவில் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்“ என்று அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான மண்டகப்படிகள் எத்தனை? கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் எவ்வளவு உள்ளன? அவற்றை யார் நிர்வகித்து வருகிறார்கள்? எவ்வளவு சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அவற்றை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 26–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.