பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற எடுத்த நடவடிக்கை என்ன? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2011–ம் ஆண்டு பழனி நகராட்சியில் மக்கள் தொகை ஒரு லட்சமாக இருந்தது. தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பொதுமக்கள், பக்தர்களின் வசதிக்காக பழனியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை.
பழனி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், பஸ் நிலையம், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்து உள்ளதால் பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
பழனியில் பக்தர்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக்கோரி 2013–ம் ஆண்டிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக முதல்–அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலன் இல்லை.
எனவே பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், ‘திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கிடைக்கவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை‘ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், பழனி கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பழனி முருகன் கோவில் இணை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 26–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.