மதுரை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் 30 பேருக்கு திடீர் வாந்தி–மயக்கம்
மதுரை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ–மாணவிகள் 30 பேருக்கு திடீர் வாந்தி–மயக்கம் ஏற்பட்டது.
கள்ளந்திரி,
மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே வெள்ளியங்குன்றத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தினமும் மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. இதேபோல் நேற்று மதியம் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் 30–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் திடீரென வாந்தி எடுத்தனர். சில மாணவர்கள் வாந்தி எடுத்ததோடு மயங்கியும் விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், வாந்தி–மயக்கம் ஏற்பட்ட மாணவ–மாணவிகளை உடனடியாக கள்ளந்திரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் 19 பேர் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் அவர்கள் மட்டும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் அவர்களை பரிசோதித்த மருத்துவக்குழுவினர், மாணவ–மாணவிகளின் உடல் நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. சிசிக்சைக்கு பின்பு அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். ஒரு சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர், என்றனர்.
சத்துணவு சாப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்துணவுடன் சேர்க்கப்பட்டு இருந்த மீள்மேக்கர் எனப்படும் உணவுப்பொருள் ஒத்துக்கொள்ளாததால் மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து கல்வி அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.