மேற்குவங்கத்தில் மம்தா, சி.பி.ஐ. மோதல் : நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து பா.ஜனதா நாடகம் நடத்துகிறது - சிவசேனா தாக்கு


மேற்குவங்கத்தில் மம்தா, சி.பி.ஐ. மோதல் : நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து பா.ஜனதா நாடகம் நடத்துகிறது - சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 6 Feb 2019 12:15 AM GMT (Updated: 5 Feb 2019 11:28 PM GMT)

மேற்கு வங்காளத்தில் நாடளுமன்ற தேர்தலை முன்வைத்து பா.ஜனதா நாடகத்தை அரங்கேற்றுவதாக சிவசேனா குற்றம்சாட்டியது.

மும்பை, 

மேற்கு வங்காளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் மீது ரூ.2 ஆயிரம் கோடி மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அனுமதிக்காமல் மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து மத்திய மற்றும் மராட்டிய பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி, அதன் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:-

கொல்கத்தாவில் நடந்து வரும் சம்பவங்கள் அனைத்தும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும். கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரிக்க சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் முறையான சம்மன் கூட எடுத்து செல்லவில்லை.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கடந்த 4½ ஆண்டுகளாக சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் ஏன் தீவிரம் காட்டவில்லை.

மேற்கு வங்கத்தில் நிலவும் நெருக்கடி நிலையை நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்து பார்க்கவேண்டும், பா.ஜ.க.வின் தலைவராக இருந்து பார்க்கக் கூடாது.

வரும் தேர்தலில் வடஇந்தியா முதல் மராட்டியம் வரை உள்ள 100 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா குறைவான இடங்களிலேயே வெற்றிபெறும். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக மேற்கு வங்கத்தில் கூடுதலாக 15 இடங்களை கைப்பற்ற அக்கட்சி திட்டமிடுகிறது.

மம்தா பானர்ஜிக்கும், சி.பி.ஐ.க்கும் இடையேயான மோதல் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதாவால் நாடகம் நிகழ்த்தப்படுகிறது.

மம்தா பானர்ஜிக்கும், எங்களுக்கு கருத்துவேறுபாடு உள்ளது. ஆனாலும், அவர் மத்திய அரசுக்கு நேர்மையுடன் பதிலடி கொடுத்து வருகிறார்.

இவ்வாறு அதில் சிவசேனா கூறியுள்ளது.

Next Story