மும்ரா ரெயில் நிலையம் அருகே 10 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண்ணுக்கு வலைவீச்சு


மும்ரா ரெயில் நிலையம் அருகே 10 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண்ணுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Feb 2019 5:31 AM IST (Updated: 6 Feb 2019 5:31 AM IST)
t-max-icont-min-icon

மும்ரா ரெயில் நிலையம் அருகே 10 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தானே,

தானே மாவட்டம் மும்ரா ரெயில் நிலையம் அருகில் மனைவியுடன் வசித்து வருபவர் அப்துல் கான் (வயது22). இவருக்கு அர்பாஸ் (வயது3) என்ற மகனும், சல்மான் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது. சம்பவத்தன்று அப்துல் கானின் உறவினரான 9 வயது சிறுமி 10 மாதக்குழந்தை சல்மானுடன் ரெயில்நிலையம் அருகில் உள்ள பாலத்தின் கீழ் விளையாடி கொண்டு இருந்தாள்.

அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் சிறுமியிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கி வருமாறு 10 ரூபாய் கொடுத்தார். மேலும் குழந்தையை தன்னிடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினார். சிறுமியும் பெண்ணுக்கு உதவி செய்ய குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு கடைக்கு சென்றார்.

இந்தநிலையில் சிறுமி திரும்பி வந்து பார்த்த போது, குழந்தையையும் அந்த பெண்ணையும் காணவில்லை. இதனால் பதறிப்போன சிறுமி அழுது கொண்டே குழந்தையின் பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் குழந்தையையும், அந்த பெண்ணையும் அந்த பகுதியில் தேடி அலைந்தனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே குழந்தையின் பெற்றோர் சம்பவம் குறித்து மும்ரா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story