குளிருக்கு இதமான வெப்பம் தரும் ‘ஜாக்கெட்’
இந்தியாவில் குளிர் பிரதேசங்கள் என்றால் நிச்சயம் வட மாநிலங்கள்தான். அங்கு நிலவும் குளிரை தாக்குப் பிடிக்க கம்பளியால் ஆன ஜாக்கெட்டுகள் போதுமானவை.
பனிப்பொழிவு இருந்தால் மேல்பகுதி தோலினால் ஆன உள்புறம் கம்பளி பகுதி கொண்ட ஜாக்கெட் போதும். அதிலும் தெர்மல் வேர் எனப்படும் ஜாக்கெட்டுகளும் அணிய வேண்டியிருக்கும். ஆனால் இப்போது பேட்டரி மூலம் வெப்பத்தை அளிக்கக் கூடிய ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. ஹம்ப்கோ என்ற பெயரிலான இந்த ஜாக்கெட்டுகளை அணிந்தால் 5 விநாடிகளில் வெப்பம் பரவுவதை உணர முடியும். வெளியில் உறைபனி இருந்தாலும், உடம்பிற்கு கதகதப்பை தொடர்ந்து இது அளிக்கும்.
இது வழக்கமான காயில் ஹீட்டரை விட மெலிதானது. இதனால் இந்த ஜாக்கெட்டின் எடை அதிகமாக இருக்காது. மலையேற்ற வீரர்கள், பனிச் சறுக்கில் ஈடுபடுவோர், பனி விளையாட்டு வீரர்களுக்கும் இது மிகவும் ஏற்றதாகும். இதன் மேல் பகுதி டெப்லான் இழை பூசப்பட்டுள்ளது.
நம்மூரில் எண்ணெய் தேவைப்படாத சப்பாத்தி கல், தோசைக் கல் மற்றும் கடாய் ஆகியவற்றின் மீது டெப்லான் பூச்சு இருக்கும்.
இது எண்ணெய் இல்லாமல் உணவுப் பொருள் தயார் செய்ய உதவும். அத்தகைய பூச்சு இந்த ஜாக்கெட் மேல் உள்ளதால் எத்தகைய அழுக்கும் இதன் மீது படியாது. எளிதில் சுத்தம் செய்ய முடியும். இதில் கிராபீன் சூடேற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராபீன் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து 2010-ம் ஆண்டிலேயே நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் கூற்று இந்த ஜாக்கெட் உருவாக்கத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 8 மணி நேரம் சூடு நிலைத்திருக்கும். 3 வகையில் சூட்டின் அளவை (அதிகபட்சம், நடுத்தரம், மிகக் குறைவு) நிர்ணயிக்கலாம். மார்புப் பகுதி மட்டுமின்றி கைகளிலும் ஹீட்டர் இருப்பதால் கைகள் விறைத்துப்போவது தவிர்க்கப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 110 முதல் 130 பாரன் ஹீட் வரையிலும், நடுத்தர அளவில் 95 முதல் 110 பாரன் ஹீட் வரையிலும், குறைவான அளவில் 75 முதல் 95 பாரன்ஹீட் வரையிலும் வெப்பம் வெளியாகும். கையுறைகளும் இதனுடனே உள்ளது. அதேபோல கப் பகுதியை இறுக்கி மூட வெல்குரோ பட்டைகள் உள்ளன. அதேபோல தலைப்பகுதி ஹூடை கழற்றி மாட்டும் வசதி உள்ளது. நீர் உட்புகாத தன்மை கொண்டது. பவர்பேங்க் மூலம் இதை சார்ஜ் செய்யலாம். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்துள்ள இதன் விலை 230 டாலர்.
Related Tags :
Next Story