ரெட்டியார்பட்டியில் ரூ.28¾ கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்


ரெட்டியார்பட்டியில் ரூ.28¾ கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்  அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Feb 2019 4:00 AM IST (Updated: 6 Feb 2019 5:33 PM IST)
t-max-icont-min-icon

ரெட்டியார்பட்டியில் ரூ.28¾ கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

நெல்லை,

ரெட்டியார்பட்டியில் ரூ.28¾ கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.28 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் ரெட்டியார்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள 64 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் ராஜலட்சுமி, கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த கூட்டுக் குடிநீர் திட்டம், பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனை சேர்ந்த இட்டேரி, புதுக்குளம், முன்னீர்பள்ளம், முத்தூர், நொச்சிகுளம், சிவந்திப்பட்டி, ரெட்டியார்பட்டி என 7 பஞ்சாயத்துகளில் உள்ள 64 கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி

இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் ஆதாரமாக திருமலைக்கொழுந்தபுரம் அருகே தாமிரபரணி ஆற்றில் ஐந்து நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து தலைமையிடத்தில் உள்ள 2.45 லட்சம் லிட்டர் கொள்ளளவு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றும் செய்து, அதில் இருந்து ரெட்டியார்பட்டியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கும், குழாய்கள் மூலம் ஏற்கனவே உள்ள இரண்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள மூன்று தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றும் செய்யப்படும்.

இந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து 53.01 கிலோ மீட்டர் குடிநீர் குழாய்கள் மூலம் புதிதாக அமைக்கப்பட உள்ள 15 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் ஏற்கனவே உள்ள 42 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் நீரேற்றம் செய்யப்யபட்டு, ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் பொது குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் நெல்லை உதவி கலெக்டர் மணீஸ்நாரணவரே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரசாத், நிர்வாக பொறியாளர் அழகப்பன், உதவி நிர்வாக பொறியாளர் மயில்வாகனன், உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், இளைஞர் அணி செயலாளர் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், இணைச்செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், சிறுபான்மை பிரிவு செயலாளர் கபிரியேல் ஜெபராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், தலைவர் ஏ.கே.சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர் வடிவேல், ஒன்றிய செயலாளர் மருதூர்ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story