அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் நெல்லையில் வைகோ பேட்டி


அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் நெல்லையில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2019 9:30 PM GMT (Updated: 6 Feb 2019 12:13 PM GMT)

அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று வைகோ கூறினார்.

நெல்லை,

அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று வைகோ கூறினார்.

பேட்டி

நெல்லையில் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்ந்து 5 நாட்களாக ஆஜராகி வருகிறேன். ஆனால் எனது வாதத்தை முன்வைக்க கோர்ட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை தெரிவிக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தயாராக இல்லை.

தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கடந்த 2013–ம் ஆண்டில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு கைக்கூலியாக வேலை பார்க்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இந்த ஆலையை திறக்க தமிழக அரசு எல்லா வகையிலும் உதவி செய்து வருகிறது. பொதுமக்களை ஏமாற்ற ஆலையை திறக்கமாட்டோம் என்று கூறுகிறார்கள்.

அணை பாதுகாப்பு மசோதா

தமிழகத்தில் அரசு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த தகுதியும் கிடையாது. மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி கொடுத்ததே மத்திய அரசு தான். அங்கு அணை கட்டினாலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதாலும் தமிழகத்தில் பெரும் பகுதி விவசாய நிலங்கள் பாலைவனமாகி விடும். பெரியார், அண்ணா, காமராஜர் பெற்றுத்தந்த சமூகநீதியை அழித்துவிட்டார்.

அணை பாதுகாப்பு மசோதாவில் அந்தந்த மாநிலங்களுக்கு அதன் அணைகள் குறித்து முழு உரிமை உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதுகுறித்து நான் பலமுறை குரல் கொடுத்து உள்ளேன். முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இதையும் மீறி இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவிலேயே தமிழகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு தமிழகத்திற்கு இதைவிட பெரிய வஞ்சகம் செய்ய முடியாது.

மோடிக்கு கருப்புக்கொடி

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடியை கண்டித்து நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மோடிக்கு தமிழகத்தில் வேலையே இல்லை. எனவே, மோடி தமிழகத்தில் எங்கு வந்தாலும் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம். வருகிற 19–ந் தேதி தமிழகத்திற்கு வருகின்ற மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம்.

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பாசீச ஆட்சி தலைதூக்கிவிடும். இதனால் அனைவரும் மோடியை எதிர்க்கிறார்கள். மாநில கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தான் மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் நிஜாம், தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story