வேலூரில் பைனான்சியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை
வேலூரில் பைனான்சியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வேலூர் தென்னைமர தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). இவர் பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். மேலும் ஊதுபத்தி வினியோகஸ்தராகவும் உள்ளார். இவரது உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வேலூர் மாநகராட்சி அருகேயுள்ள திருமண மண்படத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், அவர் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். நள்ளிரவு 12 மணியளவில் பன்னீர்செல்வம் அவசர தேவைக்காக வீட்டிற்கு வந்து விட்டு கதவை பூட்டியபின் மீண்டும் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் 2 மணியளவில் தூங்குவதற்காக வீட்டிற்கு வந்தார்.
அங்கு வீட்டின் முன்பக்க இரும்பு கதவு, தாழ்ப்பாள், மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அறைகள் முழுவதும் ஆங்காங்கே துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பன்னீர்செல்வம் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. திருடப்பட்ட நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.