சங்கரன்கோவிலில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளை பார்வையிட வந்த குழுவினருக்கு வியாபாரிகள் எதிர்ப்பு
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் பகுதியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளை பார்வையிட வந்த குழுவினருக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் பகுதியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளை பார்வையிட வந்த குழுவினருக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரிகள் எதிர்ப்புநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலை சுற்றி உள்ள பகுதிகளை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்வையிட்டார். பின்னர் அதில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் நேற்று காலை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளை பார்வையிட ராதாகிருஷ்ணன் கோவில் வாசல் பகுதிக்கு வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு, இடங்களை மீண்டும் அளக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தள்ளு–முள்ளு எற்பட்டது.
பரபரப்புஇதுகுறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து வர்த்தக சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கடைகளை அடைத்து தங்களின் எதிர்பை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராதாகிருஷ்ணன் குழுவினர் கோவிலின் சுற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் உள்ள இடங்களை அளந்தனர். தொடர்ந்து அம்மன் சன்னதி தெருவில் ஒதுக்குப்புறமாக உள்ள மாற்றுத்திறனாளி குமார் என்பவரின் கடையை அதிகாரிகள் அகற்றினர்.
அதனை தொடர்ந்து திருத்தொண்டர் சபை குழுவினர் சங்கரன்கோவில் சுற்று பகுதிகளில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கோவில் வாசல் பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.