திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரத்தின் கொடி மங்கை சிற்பத்தில் ‘திடீர்’ விரிசல் பக்தர்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள கொடிமங்கை சிற்பத்தில் ‘திடீர்’ விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்குள் பக்தர்கள் உள்ளே வருவதற்கு ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம் என 4 கோபுர வாசல்கள் உள்ளன. இதில் பே கோபுரம் தற்போது பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கோவில் 9 கோபுரங்கள் கொண்டதாகும். கோபுரங்களில் பல்வேறு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி சில இடங்களில் ஒரே கற்களில் பல சிற்பங்கள் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.
கோவிலின் அம்மணி அம்மன் கோபுர வாசலின் கீழ் பகுதியில் 32 அடி உயரமுள்ள ஒரே கல்லில் கொடி மங்கை, முருகர், விநாயகர் உள்பட பல்வேறு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கொடி மங்கை சிற்பத்தின் மார்பு பகுதிக்கு மேலிருந்து திடீரென விரிசல் விட்டு காணப்படுகிறது. இதனால் கோபுரத்திற்கு ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கோவில் இணை ஆணையாளர் ஞானசேகரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கோவில் அலுவலர்கள் இந்த சிலையை புகைப்படம் எடுத்து சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரிடம் கேட்டபோது, ‘‘இந்த கொடி மங்கை சிற்பத்தின் மார்பு பகுதிக்கு மேல் விரிசல் விட்டு உள்ளது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விரிசல் கடந்த 2002–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு இருந்தே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.