திருச்செந்தூரில் கிணற்றில் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளி போலீசார் விசாரணை
திருச்செந்தூரில் கிணற்றில் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் கிணற்றில் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணற்றில் பிணம்திருச்செந்தூர் ஆவுடையார்குளம் அருகில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் மாலையில் ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் சட்டை, லுங்கி அணிந்து இருந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, அந்த நபரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டிட தொழிலாளிஅந்த கிணற்றின் வெளியே துணிப்பை இருந்தது. அதில் சில துணிகளும், ஆதார் அடையாள அட்டையும் இருந்தது. அதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்தவர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பங்களா தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கட்டிட தொழிலாளி அருணாசலம் (வயது 37) என்பது தெரியவந்தது.
இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். 2 மனைவிகளும், குழந்தைகளுடன் பிரிந்து சென்றதால், அருணாசலம் தனியாக வசித்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இவர் கடந்த மாதம் 31–ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பின்னர் மாயமானார். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.