ஆரணியில் சாலைபாதுகாப்பு வார விழாவில் விழிப்புணர்வு நாடகம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு


ஆரணியில் சாலைபாதுகாப்பு வார விழாவில் விழிப்புணர்வு நாடகம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Feb 2019 10:00 PM GMT (Updated: 6 Feb 2019 3:45 PM GMT)

சாலை பாதுகாப்பு வார விழாவில் நாடக கலைஞர்கள் மூலம் நடந்த விழாவில் சாலை விதிகளை மதிக்காமல் சிலர் வருவதுபோலவும் அவர்கள் மீது எமதர்மராஜா வேடமிட்டவர்கள் மோதுவதுபோலவும் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது வித்தியாசமாக இருந்தது.


ஆரணி, 

ஆரணியில் நேற்று உட்கோட்ட காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தியது. இதனையொட்டி நேற்று காலை ஆரணி நகர காவல் நிலையம் அருகே உள்ள கோட்டை மைதானத்திலிருந்து போலீசார் மற்றும் தொண்டு நிறுவனத்தினர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகத்தினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்ற பிரமாண்ட மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

டாக்டர் எம்.ஜி.ஆர்.சொக்கலிங்கம் கலைக்கல்லூரி முதல்வர் சுகுமாரன், சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை மகேஸ்வரி, பஸ்உரிமையாளர் சங்க பொருளாளர் சதீஷ், மினி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி மணிமாறன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் முன்னிலை வகித்தனர். நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வரவேற்றார். பேரணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆரணி உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார், சிறுகுறு வியாபாரிகள் சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார்சைக்கிள்களில் அணிவகுத்து சென்றனர். மாணவ, மாணவிகள் வழியெங்கும் பொதுமக்களிடம் சாலை விதிமுறைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தனர்.

பேரணி காந்திரோடு, மார்க்கெட்ரோடு, புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் வழியாக மீண்டும் கோட்டை மைதானத்தை அடைந்தது. இதில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சென்றனர். மாலையில் நாடக கலைஞர்கள் மூலம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடந்தது. அப்போது சாலை விதிகளை கடைபிடிக்காமல் வரும் வாகன ஓட்டிகளாக நடித்தவர்கள்மீது எமதர்ம ராஜா போல் வேடமிட்டவர்கள் மோதுவதுபோலவும், அதில் விதிகளை கடைபிடிக்காமல் வந்தவர்கள் வாகனங்கள் கவிழ்ந்து இறப்பதுபோலவும் நடித்துக்காட்டினர்.

Next Story