கிருஷ்ணகிரிக்கு, 24-ந் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கிருஷ்ணகிரிக்கு, 24-ந் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Feb 2019 11:00 PM GMT (Updated: 6 Feb 2019 3:57 PM GMT)

கிருஷ்ணகிரிக்கு வருகிற 24-ந் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிப்பது என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியில் உள்ள கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- கூட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் 24-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக வரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டியில் 24-ந் தேதி பகல் 12 மணிக்கு கரகாட்டம், வாணவேடிக்கை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிப்பது.

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற ஊராட்சி சபை கூட்டங்கள் மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பு பெற்றுள்ளது. இதை செயல்படுத்த உத்தரவிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டில் தடுப்பணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி தலைமை கழக அனுமதியுடன் விவசாயிகளை திரட்டி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் முழுவதும் போர்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், நிர்வாகிகள் அமீன், ரஜினி செல்வம், அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராசன், கோவிந்தன், கோவிந்தசாமி, எக்கூர் செல்வம், பேரூர் செயலாளர்கள் பாபு, பாலன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story