சேலத்தில் பேன்சி கடை உரிமையாளரிடம் ரூ.90 லட்சம் மோசடி தம்பதி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
சேலத்தில் ரூ.90 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேன்சி கடை உரிமையாளர், போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் மனு கொடுத்து உள்ளார்.
சேலம்,
சேலம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பிரகாரம் (வயது 62). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சேலத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவரும், நானும் நண்பர்கள். கடந்த ஆண்டு அவர் தனது மனைவியுடன், என்னிடம் வந்து வியாபாரத்தை மேம்படுத்த வேண்டி உள்ளது. இதற்காக ரூ.60 லட்சம் வேண்டும் என்று என்னிடம் கடன் கேட்டார். அப்போது நான் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று கூறினேன். பின்னர் அவர் 3 மாதத்தில் அந்த தொகையை தந்து விடுகிறேன் என்று கூறினார்.
இதை நம்பி நான் வங்கியில் அடகு வைத்து இருந்த எனது வீட்டு பத்திரத்தின் பேரில் ரூ.60 லட்சம் கடன் பெற்று அவருக்கு கொடுத்தேன். அதைத்தொடர்ந்து அவர் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டி உள்ளது. அதற்காக ரூ.30 லட்சம் கடனாக வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
இதனால் நான் மீண்டும் ரூ.30 லட்சத்தை ஜவுளி வியாபாரியிடம் கொடுத்தேன். இந்த நிலையில் நான் கடனாக கொடுத்த ரூ.90 லட்சத்தை அவர் திரும்ப தரவில்லை. மேலும் இது குறித்து அவரிடம் மீண்டும் கேட்ட போது அவர் சரியான பதில் கூறவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் ஜவுளி கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். எனவே ரூ.90 லட்சம் மோசடி செய்த தம்பதியினரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story