அளவுக்கு அதிகமாக மது கொடுத்து போதையாக்கி விட்டு நண்பரின் ரூ.25 லட்சத்துடன் ஓட்டம் பிடித்த தனியார் நிறுவன ஊழியர் ஓசூரில் பரபரப்பு
ஓசூரில் நண்பருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து போதையாக்கி விட்டு, அவரது ரூ.25 லட்சத்துடன் தனியார் நிறுவன ஊழியர் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர்,
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் நரசிம்மய்யா. இவரது மகன் லட்சுமிபதி (வயது 38). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் தளியில் உள்ளது. அந்த நிலத்தை விற்ற பணம் 25 லட்சத்துடன் லட்சுமிபதி ஓசூர் வந்தார்.
லட்சுமிபதி கையில் பணத்துடன் தனது நண்பரான அதே நிறுவன ஊழியர் பீரப்பா (37) என்பவரின் வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவரை பீரப்பா அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து போதையாக்கினார். இதனால் லட்சுமிபதி அங்கேயே தூங்கினார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவர் எழுந்து பார்த்தார். அப்போது நண்பர் பீரப்பாவை காணவில்லை. மேலும் நிலத்தை விற்று அவர் வைத்திருந்த ரூ.25 லட்சத்தையும் காணவில்லை. இதனால் லட்சுமிபதி அதிர்ச்சி அடைந்தார். தனக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து போதையாக்கி விட்டு, பீரப்பா பணத்துடன் ஓட்டம் பிடித்தது அவருக்கு தெரியவந்தது.
இது குறித்து லட்சுமிபதி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story