கே.வி.குப்பம் அருகே நடந்த சம்பவத்தில் திருப்பம்: வேலைதேடி வந்தபோது கொலை செய்யப்பட்ட அசாம் வாலிபர் 3 பேர் கைது
அசாம் மாநில வாலிபர் மரத்தில் கட்டி வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலைதேடி தமிழகத்திற்கு வந்த அவரை கொள்ளையன் என நினைத்து மரத்தில் கட்டி வைத்து அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம்,
கே.வி.குப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் குஞ்சனன் (வயது 34) என்பவர் மரத்தில் கட்டி வைத்து கோரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். குஞ்சனன், கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர் கலாநந்தனின் (60) வீட்டு கதவை தட்டியதாகவும், கதவை திறந்தபோது அவர் திடீரென வீட்டுக்குள் நுழைய முயன்றதாகவும் கூறப்பட்டது.
கலாநந்தன் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தபோது குஞ்சனன் தப்பி ஓடிய நிலையில் அவரை கொள்ளையன் என நினைத்து அனைவரும் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து தாக்கி கொலை செய்துள்ளனர். அவரை கொலை செய்தவர்கள் உடலை அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் வீசிவிட்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீசார் விரைந்து சென்று குஞ்சனன் உடலை கைப்பற்றினர். சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
அசாம் மாநிலத்தை சேர்ந்த சிலர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிக்கூர் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் குஞ்சனனை அங்கு வேலைக்கு சேர்க்க ரெயிலில் அழைத்து வந்துள்ளனர். பெங்களூரு வழியாக வந்த அவர்கள் 3 பேரும் பர்கூர் செல்வதற்கு ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டதால் அவர்கள் காட்பாடி ரெயில் நிலையத்தில் இறங்கினர்.
இந்த நிலையில் குஞ்சனனுக்கு அவர்களுடன் வேலைக்கு செல்வதில் உடன்பாடு இல்லை. இது குறித்து தன்னுடன் வந்தவர்களிடம் அவர் கூறவே அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்குள் இரவாகி விட்டது. பின்னர் குஞ்சனன் தனியாக சென்று விட்டார்.
இதனையடுத்து உடன்வந்தவர்கள் குஞ்சனனை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் வழிதவறி சென்ற குஞ்சனன் நள்ளிரவில் கொசவன்புதூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்ததும் சிலர் இவரை வடமாநிலத்திலிருந்து வந்த கொள்ளையன் என நினைத்து சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஞ்சனனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவர் வேலையில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்றுவார் என நினைத்த மனைவிக்கு தனது கணவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கண்டவாறு போலீசார் கூறினர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்த கலாநந்தன் (60), முரளி (44), விஜயன் (55) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குல தெய்வ கோவிலுக்கு சென்ற மூதாட்டியை சிலர் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து அடித்துக்கொன்றனர். அந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் அடங்குவதற்குள் பல்வேறு ஊர்களில் வடமாநிலத்திலிருந்து வந்தவர்களை கொள்ளையர்கள் என பொதுமக்கள் தாக்கிய சம்பவங்கள் தொடர்ந்தன. போலீசாரின் கடும் நடவடிக்கைக்கு பிறகு இந்த சம்பவம் குறைந்தது.
இந்த நிலையில் வேலைதேடி அசாம் மாநிலத்திலிருந்து வந்த குஞ்சனன், வழிதவறி சென்றபோது அவரை கொசவன்புதூர் கிராமத்தில் கொள்ளையன் என கருதி கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story