தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு, பெற்றோருடன் அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவ-மாணவிகள்
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோருடன் மாணவ-மாணவிகள் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர்.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே தேனாடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேனாடு மட்டுமின்றி கிட்டட்டி மட்டம், பெங்கால்மட்டம், கோத்திபென், மெரிலேன்ட் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக மூர்த்தி, உதவி தலைமை ஆசிரியராக ஷீலா ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட கல்வித்துறை ஈடுபட்டு உள்ளது. அதன்படி தேனாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி கோக்கலாடா அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் கோக்கலாடா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தேனாடு அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதேபோன்று உதவி தலைமை ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தேனாடு அரசு பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் மூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டது மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை எதிர்த்து நேற்று காலை தேனாடு அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோருடன் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் மூர்த்தியை மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
உடனே அங்கு புதிய தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க வந்த ரவிக்குமார் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்த பெற்றோர் தலைமை ஆசிரியர் மூர்த்தி மீண்டும் பள்ளிக்கு வரும் வரை தங்களது குழந்தைகளை அனுப்ப மாட்டோம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story