மணமக்களை அழைத்து வந்தபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்து கரூரை சேர்ந்த 13 பேர் காயம்
கரூரில் திருமணம் முடிந்து மணமக்களை அழைத்து வந்த மினி பஸ் காரிமங்கலம் அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் கரூரை சேர்ந்த 13 பேர் காயம் அடைந்தனர்.
காரிமங்கலம்,
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று கரூரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு மினி பஸ்சிலும், மணமக்கள் தனி காரிலும் காவேரிப்பட்டணத்திற்கு வந்தனர்.
இந்த பஸ்சை கரூர் அருகே உள்ள வெண்ணமலையை சேர்ந்த பெரியசாமி (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். இதில் மணமகள் வீட்டை சேர்ந்த 13 பேர் வந்தனர். இந்த பஸ் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மொரப்பூர் மேம்பாலத்தில் வந்தபோது பஸ்சுக்கு பின்னால் ஒரு கார் வந்தது. அந்த கார், மினி பஸ்சை முந்தி செல்வதும், பின்னர் மெதுவாக செல்வதுமாக வந்துள்ளது.
இதனால் பஸ் டிரைவர் பெரியசாமி அந்த காரை முந்தி செல்ல முயன்றார். அப்போது பஸ்சுக்கு பின்னால் மற்றொரு கார் வந்ததால் டிரைவர் பெரியசாமி பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கிருஷ்ணகிரி- தர்மபுரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த கரூரை சேர்ந்த திருப்பதி ராஜா (28), ரவி (53), ஆனந்தி (45), சாந்தி (38), செல்வம் (40) உள்ளிட்ட 13 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடுரோட்டில் கவிழ்ந்த மினிபஸ்சை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து பஸ் டிரைவர் பெரியசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.் இந்த விபத்தால் கிருஷ்ணகிரி- தர்மபுரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story