நிலக்கோட்டையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை


நிலக்கோட்டையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2019 4:00 AM IST (Updated: 7 Feb 2019 5:54 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிலக்கோட்டை,

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி சுபத்ரா (43). இவர், நிலக்கோட்டையில் உள்ள சிறையில் தலைமை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே உள்ள கச்சேரி தெருவில் அவர்கள் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் தனது மனைவியுடன் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் முருகேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று முதல் அவர் வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே சுபத்ரா தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாக செல்போனை முருகேசன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த சுபத்ரா நேரடியாக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுபத்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story