தோட்டத்தில் கூலி வேலை பார்த்தவர் கொலை, தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கூடலூரில் கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில், மற்றொரு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தேனி,
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 52). இவர், கூடலூர் அருகே அப்பாச்சி பண்ணைக்கு மேற்கு பகுதியில் 18-ம் கால்வாயையொட்டி உள்ள சபீர் என்பவருடைய தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். அதே தோட்டத்தில், கூடலூர் கரிமேட்டுப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக்ஸ்பாண்டியன் (58) என்பவரும் கூலி வேலை பார்த்து வந்தார்.
தோட்டத்தின் மேலாளராக வேலை பார்த்த சுருளிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம், ராஜன் தன்னை புகார் கூறியதாக அலெக்ஸ்பாண்டியன் கருதினார். இதுதொடர்பாக, கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜனிடம், அலெக்ஸ்பாண்டியன் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் அரிவாளால் ராஜனை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ்பாண்டியனை கைது செய்தனர். மேலும் அவர் மீது, தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார்.
கொலை செய்த குற்றத்துக்காக அலெக்ஸ்பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அலெக்ஸ்பாண்டியனை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story