என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: தாசில்தார் உள்பட 4 பேர் சாட்சியம் விசாரணை 15-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தாசில்தார் உள்பட 4 பேர் நேற்று நாமக்கல் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நாமக்கல்,
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவரது கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி உள்பட பலர் சாட்சியம் அளித்து உள்ளனர்.
நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 15 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கருணாகரன் ஆகியோர் ஈரோடு மற்றும் பெருந்துறையில் யுவராஜ் மீது உள்ள வழக்குகள் பற்றி சாட்சியம் அளித்தனர். அதை தொடர்ந்து தாசில்தார் குப்புசாமி, கோகுல்ராஜ் கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கையை பார்வையிட்டு ஆய்வு செய்தது தொடர்பாக சாட்சியம் அளித்தார். பின்னர் யுவராஜின் உறவினரான கார்த்திக் என்பவரும் சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story