விவசாயியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் வேலூர் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை நன்னடத்தையில்கூட 20 ஆண்டுகள் வெளியே வரமுடியாது என்றும் நீதிபதி உத்தரவு
வேலூர் அருகே விவசாயியை கொலைசெய்து, நகை- பணத்தை கொள்ளையடித்த வழக்கில் வாலிபருக்கு வேலூர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர், நன்னடத்தையில் கூட 20 ஆண்டுகள் வெளியே வரமுடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
வேலூர்,
வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே உள்ள கத்தாழம்பட்டு கொல்லைமேடு பகுதியை சேர்ந்த நமச்சிவாய கவுண்டர் மகன் சரவணன் (வயது 34). விவசாயம் செய்துவந்த இவர் சீட்டு நடத்தியும் வந்தார். 29.5.2015 அன்று இரவு உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சரவணனின் வீட்டில் உள்ள அனைவரும் சென்றுவிட்டனர். சரவணன் மட்டும் வீட்டில் இருந்தார்.
அவர் இரவில் வீட்டை பூட்டிக்கொண்டு தூங்கினார். கீழ்வல்லம் கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் மகன் பாபு என்கிற ஞானசேகரன் (29). சரவணன் சீட்டு நடத்திவந்ததால் அவருடைய வீட்டில் நகை, பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பாபு, சரவணன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அதற்காக சில சிறுவர்கள் மூலம் சரவணன் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட அவர் 3 சிறுவர்களுடன் இரவு சரவணன் வீட்டுக்கு சென்றார்.
அங்கு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சரவணன் தலையில் கல்லைத்தூக்கி போட்டனர். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.95 ஆயிரம் மற்றும் 15 பவுன் நகையை பாபு கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தவர்கள் திரும்பிவந்தபோது சரவணன் கொலைசெய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வந்தனர்.
பாபு கொள்ளையடித்த பணத்தை தனது வங்கி கணக்கில் இரண்டு தவணைகளாக டெபாசிட் செய்துள்ளார். நகையை தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்துள்ளார். இதைவைத்து சரவணனை கொலைசெய்து, நகை, பணத்தை கொள்ளையடித்தது பாபுதான் என்பதை போலீசார் உறுதி செய்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சரவணனை கொலைசெய்து, நகை, பணத்தை கொள்ளையடித்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து பாபு உள்பட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
அவர்களில் 3 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள்மீதான வழக்கு விசாரணை தனியாக நடந்துவருகிறது. பாபு மீதான வழக்குவிசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்துவந்தது. வழக்குவிசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், சரவணனை கொலைசெய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், நகை, பணத்தை கொள்ளையடித்ததற்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.குணசேகர் தீர்ப்பு வழங்கினார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் பாபு என்கிற ஞானசேகரன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாலும், குற்றத்தின் கடுமையை கருதியும் 20 ஆண்டுகள் வெளியே வராமல் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்றும், நன்னடத்தை அடிப்படையில் விடுதலைசெய்ய அரசு சலுகை வழங்கினாலும் 20 ஆண்டுகளுக்கு வெளியே வரமுடியாது என்றும் நீதிபதி குணசேகர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் அ.கோ.அண்ணாமலை ஆஜரானார்.
Related Tags :
Next Story