என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் ரூ.41 லட்சம் மோசடி
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த பா.ம.க. பிரமுகரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய் தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சமுட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவருடைய மகன் அன்பழகன் (வயது 38). நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இதுதவிர இவர் கம்மாபுரம் பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளராகவும் இருந்தார்.
இவருக்கு வேப்பூர் அருகே தருசு கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பால சுப்பிரமணியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அன்பழகன் தான் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்து வருகிறேன். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து பாலசுப்பிரமணியன் மூலம் எறுமனூரை சேர்ந்த பாலகங்காதரன் மகன் எம்.டெக் பட்டதாரியான ரத்தினவேல் (28), தனக்கு என்.எல்.சி.யில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக ரத்தினவேலிடம் அன்பழகன் ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்தை பெற்றுக்கொண்டார்.
இதேபோல் பாலசுப்பிரமணியன் மகள் கலைவாணியிடம் மனித வள மேம்பாட்டு அலுவலர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சத்து 75 ஆயிரமும், அலுவலக உதவியாளர் பணி வாங்கி தருவதாக பழனிமுத்து மகன் ராஜ்குமார் (28) என்பவரிடம் ரூ.6 லட்சம், எடையூரை சேர்ந்த கொளஞ்சி மகன் சுரேஷ் (27) என்பவருக்கு டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சத்தையும் அன்பழகன் வாங்கினார்.
இதன்படி ரத்தினவேலுக்கும், கலைவாணிக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நியமன ஆணையை பெற்ற அவர்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கொடுத்த போது, அது போலி பணி நியமன ஆணை என்று தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அன்பழகனிடம் கொடுத்த பணத்தை கேட்டதற்கு அவர் திருப்பி கொடுக்கவில்லை. அதேபோல் ராஜ்குமார், சுரேசுக்கு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தினார். இதனால் அவர்களும் பணத்தை திருப்பி கேட்டதற்கு கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.
இதுதவிர ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் ரூ.8½ லட்சம் கடனாக பெற்று அதை திருப்பி செலுத்தாமல் அன்பழகன் மோசடி செய்து விட்டார். இந்த சம்பவம் அனைத்தும் கடந்த 2017-2018-ம் ஆண்டு கால கட்டத்தில் நடந்துள்ளது.
இது பற்றி 5 பேரும் தனித்தனியே மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலி ஆணை தயாரித்தல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பா.ம.க. பிரமுகர் அன்பழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story