மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி பல்வேறு படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது


மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி பல்வேறு படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது
x
தினத்தந்தி 7 Feb 2019 4:30 AM IST (Updated: 7 Feb 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அரியலூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.

அரியலூர்,

அரியலூர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி குத்து விளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை மூலமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி அரியலூர் வருவாய் மாவட்டத்தில் இந்த அறிவியல் விருதிற்கு 50 பள்ளிகளிலிருந்து 128 மாணவர்கள் இணைய வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் காட்சி பொருட்களை தயார் செய்வதற்காக ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகையாக மாணவர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் வரவு வைக்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது அறிவியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு கண்டு பிடிப்பதின் மூலம் வரலாற்றில் நாமும் இடம் பெறலாம். இக்கண்காட்சியானது 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை வகுப்புகள் மற்றும் 9 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலை வகுப்புகள் என்று இரு பிரிவுகளாக நடைபெற்றது.

இப்போட்டியில் 2 பிரிவிலும் சேர்த்து மாவட்ட அளவில் 26 மாணவர்களின் படைப்புகள் அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் கீழப்பழுவூர் ஆசிரியப் பயிற்சி விரிவுரையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆறுகள் மற்றும் குளங்களில் உள்ள குப்பைகளை பிரித்தெடுக்கும் எந்திரம், ரேஷன் கடைகளில் கார்டு மூலம் தானியங்கி முறையில் பொருட்களை பெறுதல், பிளாஸ்டிக் பொருட்களை மறு உபயோகப்படுத்தும் முறைகள் போக்குவரத்து பாதுகாப்பு அம்சங்கள், அன்றாட வாழ்வில் சூரிய ஆற்றலின் பயன்பாடுகள், திட கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயல்பாடுகள் கடல் நீரில் இருந்து மின்சாரம், மறு சுழற்சியின் அவசியங்கள், தூய்மை பாரதம், பிளாஸ்டிக் மறு சுழற்சி முறைகள் ஆகிய படைப்புகள் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.இதில் கல்வி மாவட்ட அலுவலர்கள் செல்வராசு, மணிவண்ணன், வெற்றிச்செல்வி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, செந்தில், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி, வட்டார கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, உமையாள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டனர். 

Next Story