கருத்து கேட்பு கூட்டத்துக்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் தர்ணா


கருத்து கேட்பு கூட்டத்துக்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 6 Feb 2019 11:15 PM GMT (Updated: 6 Feb 2019 9:28 PM GMT)

கருத்து கேட்பு கூட்டத்துக்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 136 கிலோமீட்டர் து£ரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, பாலவாக்கம், சென்னங்காரணை, பனபாக்கம், ஈன்றபாளையம், பருத்திமேனிகுப்பம், காக்கவாக்கம், பேரண்டூர், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் உள்பட 20 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. சாலை அமைக்க நிலம் அளவிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலை அமைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபரப்பில் விவசாய விளைநிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாலை அமைத்தால் இழப்பு ஏற்படும் என்று தெரியவரும் பொதுமக்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும், அதில் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் (நில அளவு) சந்திரன் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

அதன்படி 20 கிராமத்தை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணிக்கு ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் மதியம் 1 மணி வரை வரவில்லை. திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதர வேலைகளை முடித்து விட்டு ஊத்துக்கோட்டைக்கு வர தாமதமானது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தாசில்தார் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை துயர்துடைப்பு தாசில்தார் லதா, ஓய்வு பெற்ற தாசில்தார் லியோ ஆகியோர் சமாதானப்படுத்தினர். 1½ மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், தேசிய நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தார். 3 போகங்கள் பயிர் செய்யும் எங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்க நாங்கள் ஒத்துகொள்ளமாட்டோம். மாற்று வழியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கைமனு அளித்தனர். இவற்றை வாங்கி கொண்ட சந்திரன் 6 வழிச்சாலை அமைப்பதற்கான உங்களது எதிர்ப்பினை தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழக அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலைந்து சென்றனர்.


Next Story