சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிப்பு செலவை கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிப்பு செலவை கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 7 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடத்தை இடித்ததற்கான செலவு தொகையை கட்டுமான நிறுவனம் தான் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை அருகே உள்ள மவுலிவாக்கத்தில் ‘பிரைம் சிருஷ்டி ஹவுசிங்’ என்ற கட்டுமான நிறுவனம் தலா 11 மாடிகளை கொண்ட 2 கட்டிடங்களை கட்டியது. இதில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள், 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர்.

மற்றொரு அடுக்குமாடி கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அதையும் இடிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவை ரத்து செய்தது.

ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து கலெக்டர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ததுடன், மற்றொரு கட்டிடத்தையும் இடிக்க உத்தரவிட்டது. இதன்படி ஒரு தனியார் நிறுவனம் மூலம் அந்த 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டது.

இதற்கான செலவு தொகையை செலுத்தினால் மட்டுமே அந்த கட்டிடம் இருந்த 103 சென்ட் நிலத்தை ஒப்படைக்க முடியும். அதுவரை அந்த நிலம் அரசின் வசம் இருக்கும் என்று கட்டுமான நிறுவனத்துக்கு காஞ்சீபுரம் கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.மனோகர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘2 அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு முன்பு திறந்தவெளி நில ஒதுக்கீடு கட்டணம், எப்.எஸ்.ஐ. கட்டணம், உள்கட்டமைப்பு வளர்ச்சி கட்டணம், பாதுகாப்பு தொகை என சுமார் ரூ.1.12 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கட்டிடத்தை இடித்த செலவை கழித்துவிட்டு, மீதத்தொகையை திருப்பித்தரவும் நிலத்தை மனுதாரர் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், ‘கட்டிட திட்ட அனுமதியை மீறி மனுதாரர் நிறுவனம் இரண்டு 11 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடங்களை கட்டியுள்ளது. எனவே, விதியை மீறியதால் பாதுகாப்பு தொகை முழுவதையும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.) எடுத்துக்கொள்ளும். அதேபோல மற்ற கட்டணங்களும் கட்டிட திட்ட அனுமதி பெறுவதற்காக செலுத்தப்பட்டவைகளாகும். விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியதால் தான் இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டண தொகைகளை திருப்பிக்கேட்க முடியாது. எனவே, கட்டிடத்தை இடித்ததற்கான செலவு ரூ.91 லட்சத்து 54 ஆயிரத்து 264-யை வழங்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் நிறுவனம் விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியதால் தான் அடுக்குமாடி கட்டிடம் இடித்து தள்ளப்பட்டது. நிறுவனம் செய்த தவறுக்காக தமிழக அரசு துன்பத்தை அனுபவிக்க முடியாது. இந்த நிறுவனம் செய்த விதிமீறல்களினால் அப்பாவி தொழிலாளிகள் 61 பேர் பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் தொடரப்பட்ட வழக்குகளில் தங்களது உத்தரவை நியாயப்படுத்த தமிழக அரசு பெரும் தொகை செலவு செய்துள்ளது. எனவே, கட்டிடத்தை இடித்ததற்கான செலவை அரசின் தலையில் கட்டமுடியாது. மனுதாரர் கட்டுமான நிறுவனம் தான் அந்த செலவை ஏற்கவேண்டும். கலெக்டரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story