கர்நாடகத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,007 கோடி நிதி - கவர்னர் உரையில் தகவல்


கர்நாடகத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,007 கோடி நிதி - கவர்னர் உரையில் தகவல்
x
தினத்தந்தி 7 Feb 2019 3:45 AM IST (Updated: 7 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,007 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளது.

பெங்களூரு,

கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* எனது தலைமையிலான அரசு நடப்பு ஆண்டில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.3,007 கோடியும், ஐதராபாத்-கர்நாடக பகுதி மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடியும் வழங்கியுள்ளது.

* பெங்களூரு நகர் உள்பட பிற நகர்புறங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை 2.5 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

* போட்டி உலகில் உலகளவில் வேலை வாய்ப்புகளை பெற அரசு பள்ளி மாணவர்கள் கல்வியுடன் கூடுதல் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டியது முக்கியமானதாக உள்ளது. இதனால் மாணவர்கள் ஆங்கில அறிவை பெறும் வகையில் அரசு பள்ளியில் ஆங்கில வழிகல்வி தொடங்க முடிவு செய்துள்ளது. இருப்பினும் தொடக்க பள்ளிகளில் கன்னடம் கற்பிப்பதில் சமாதானம் செய்து கொள்ளவில்லை. அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

* பி.யூ.சி, இளநிலை பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சம் பெண்களின் சலுகை கட்டணத்துக்காக ரூ.95 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தரமான கல்வி கிடைப்பதற்காக அரசு முதல் நிலை கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.750 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ‘அறிவு’ திட்டத்தின் கீழ் கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரியம் சார்பில் தொழில்முறை படிப்பு பயிலும் 21,731 மாணவர்களின் கல்வி கடனுக்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 14.55 லட்சம் சிறுபான்மை மாணவர்களுக்கு ரூ.290 கோடி அளவுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* நடப்பு ஆண்டில் (2019) பீதர், கலபுரகி விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும். கலபுரகியில் விமான சோதனை ஓட்டங்கள் முடிவடைந்துள்ளன. 2,816 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாவட்டங்களை இணைக்கும் சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. 7,800 கிலோ மீட்டர் தொலைவுக்கான மாநில நெடுஞ்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும். கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி-24-ன் படி ரூ.206 கோடி செலவில் 178 சாலை மற்றும் 35 மேம்பால திட்டங்களை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* 2018 டிசம்பர் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி கர்நாடகத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 2018-19 ஆண்டில் 465 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். இந்த மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவும், மின் வினியோக நிறுவனங்கள் மூலமாகவும் பெறப்படும். மின்வினியோகத்தை முறையாக வழங்க 15 துணை மின்நிலையங்கள், 55,422 மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.

* பெங்களூருவில் புறநகர் ரெயில் நிலையத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகவாரா மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையத்தை இணைக்கும் வகையில் ‘பேஸ்-2பி’ திட்டத்துக்கு முக்கியத்துக்கும் அளிக்கப்படுகிறது. பெங்களூரு நகரில் போக்குவரத்து நிர்வாக அமைப்பு இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட உள்ளது.

* கட்டிட வரைப்படத்துக்கு ஆன்-லைனில் அனுமதி பெறும் திட்டம் 26 உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கப்பட்டுள்ளது. இது விரைவில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் விரிவுப்படுத்தப்படும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் இடம்பெற்றுள்ள உப்பள்ளி-தார்வார், மங்களூரு, தாவணகெரே, பெலகாவி மற்றும் துமகூரு ஆகிய நகரங்களில் ஒருங்கிணைந்த ஆன்-லைன் சேவைக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

* மாநில சாலை போக்குவரத்து கழகங்கள் சார்பில் புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படுவதுடன், டெப்போ மற்றும் பஸ் நிலைய கட்டிடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பணம் இல்லா பரிமாற்றம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 15.53 லட்சம் மாணவர்களுக்கு சலுகை விலை பஸ்பாஸ்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்த 3.98 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளது.

* சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை சுமுகமாக கையாள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவசரநிலையை கையாள ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

* தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கர்நாடக போலீசார் முன்னிலையில் உள்ளனர். சாலை விதிமீறல்களை கண்டுபிடிப்பது மற்றும் சாலை பாதுகாப்புக்கு நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகர கமிஷனர் அலுவலகங்களில் சைபர் தடயவியல் ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுளள்ன. இதன்மூலம் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களை கண்டுபிடிக்க போலீசார் பயிற்சி பெற்று அதை தீர்க்க முடியும்.

* பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டும் எனது அரசு அனைத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘நிர்பயா மையங்கள்’ தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கொடுமைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பெங்களூரு நகரில் சிவில் கோர்ட்டும், அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக செசன்சு கோர்ட்டும் தொடங்கப்பட்டு உள்ளது. பெண்கள் தங்களின் பிரச்சினைகளை கூற வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் அவசர உதவி மையத்தின் எண் 181-யை தொடர்பு கொள்ளலாம்.

* கர்நாடக நிதி ஒழுங்குமுறை சட்டத்தின்படி உபரி வருவாய் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்கு உள்ளாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான கடன் 25 சதவீதத்துக்கு உள்ளாகவும் உள்ளது. இதை நடப்பு ஆண்டிலும் தொடர மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

* கர்நாடகா சிறப்பான கொள்கைகள் மூலம் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் நம்மை பார்த்து திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதனால் அனைத்து உறுப்பினர்களும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அவையில் பேசி விவாதிக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story