ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது
x
தினத்தந்தி 7 Feb 2019 4:00 AM IST (Updated: 7 Feb 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை 10 மணி அளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குளஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது. அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணைஆணையர் ஜெயராமன், அறங்கா வலர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர்.

தெப்ப திருவிழாவின் முதல் நாளான 8-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 9-ந்தேதி மாலை ஹனுமந்தவாகனத்திலும், 10-ந் தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 11-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 12-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 13-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் நம்பெருமாள் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 14-ந் தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

முக்கிய திருநாளான தெப்பதிருவிழா 8-ம் நாளான 15-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

9-ம் திருநாளான 16-ந் தேதி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Next Story