பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது - புறக்கணித்தால் தகுதி நீக்கம்; சித்தராமையா எச்சரிக்கை


பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது - புறக்கணித்தால் தகுதி நீக்கம்; சித்தராமையா எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2019 10:45 PM GMT (Updated: 6 Feb 2019 9:42 PM GMT)

பெங்களூருவில் நாளை (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணித்தால் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வோம் என சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அந்த கூட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. அவர்கள் பதில் அளித்தனர். அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்றும், நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆயினும் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. சித்தராமையா தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கூட்டத்தை புறக்கணித்தால், தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா பேசியதாவது:-

வருகிற 8-ந் தேதி (நாளை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த கூட்டத்தை புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் மனு கொடுப்போம்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு இது கடைசி வாய்ப்பு ஆகும். கட்சி தலைவர்கள் பொறுமையை கடைப் பிடித்து வருகிறோம். இந்த பொறுமையை சோதிக்க வேண்டாம். இனிமேலும் பொறுமை காக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story