மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி - கவர்னர் உரையில் தகவல்
மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பதாக கவர்னர் வஜூபாய்வாலா தனது உரையில் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் வஜூபாய்வாலா உரையாற்றினார்.
அவரது உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி சர்க்கரை ஆலைகள் ரூ.2,135 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியதுள்ளது. இதில் ஜனவரி மாதம் ரூ.5 கோடி நிலுவைத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கரும்புக்கு நியாயமான விலை மற்றும் லாபகரமான விலை வழங்கவும் அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் மற்றும் குடிநீர் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் இந்த திட்டத்திற்கான டெண்டரை மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு இறுதி செய்யும்.
ரூ.1,050 கோடி செலவில் நாராயணபுரா இடது கால்வாய் மற்றும் மேல் கிருஷ்ணா திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தினஒலே குடிநீர் திட்டம் மற்றும் மேல் பத்ரா திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக நில வருவாய் சட்டப்படி எளிய முறையில் ஆன்-லைனில் பத்திரப்பதிவு அடிப்படையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிலாக்கர் வசதி மூலம் நில ஆவணங்களை பாதுகாக்க மின்னணு முறை செயல்படுத்தப்படுகிறது. போடி முக்தா அபியனா திட்டத்தின் கீழ் 11,577 கிராமங்களில் சர்வே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் முன்னோடி மாநிலமாக மக்களுக்கு உலகளாவிய சுகாதார பாதுகாப்பு வழங்கும் வகையில் ஆரோக்கிய கர்நாடகம் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனுடன் அயூஸ்மன் பாரத் திட்டமும் சேர்க்கப்பட்டு மாநிலத்தில் சுகாதார திட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் இலவசமாக 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மருத்துவ வசதிகளை அரசின் சலுகை திட்டத்தின் கீழ் பெற முடியும். ஆண்டுக்கு ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
அதுபோல் வறுமைக்கோட்டுக்கு மேல்உள்ள குடும்பத்தினர் மருத்துவ வசதிகளை பெற அரசு 30 சதவீத சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் ஒரு குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான மருத்துவ வசதிகளை பெற முடியும். கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதியுடன் இந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 822 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். அனைத்து சுகாதார துணை மையங்களை தரம் உயர்த்துவதை அரசு நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. அடுத்த 7 ஆண்டுக்குள் சிறந்த ஆரம்ப சுகாதார திட்ட சேவைகள் கிராமப்புற பகுதிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கதக், கொப்பல், சாம்ராஜ்நகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களில் 450 படுக்கை வசதிகளுடன் புதியதாக மருத்துவமனைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் விஜயநகரா விம்ஸ் ஆஸ்பத்திரி, மைசூரு தருமா மருத்துவ மையம் ஆகியவையும், பல்லாரி, கலபுரகி அரசு ஆஸ்பத்திரிகளும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக மாற்றப்படும்.
மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்த ‘ஜலதாரே’ திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த திட்டம் ரூ.53 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 85 லிட்டர் குடிநீர் கிடைக்கும். கிராமப் பகுதிகளில் 16 ஆயிரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.80 கோடி பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதியான உலக கழிவறை தினத்தன்று கர்நாடகம் திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி தான் இதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் முன்னோடியாக நமது மாநிலம் இந்த இலக்கை எட்டியதை எனது அரசு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது. கர்நாடகத்தின் கிராமப் பகுதிகளில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை திறம்பட நிர்வகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக விரைவில் சுகாதார கொள்கையை வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட அரசின் சமூகநலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களின் குழந்தைகள் தரமான கல்வி வசதி் பெற 1,135 உண்டு உறைவிட பள்ளிகளும், 4,817 தங்கும் விடுதிகளும் கட்டிக் கொடுத்துள்ளது. மேலும் 152 உண்டு உறைவிட பள்ளிகளும், 427 தங்கும் விடுதிகளும் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சம்ருதி, உன்னதி மற்றும் ஐராவதா ஆகிய புதிய திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சேர்ந்த தொழில்முனைவோரை ஊக்குவிக்க தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் 15 ஆயிரத்து 650 பயனாளிகளுக்கு ரூ.650 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கங்கா கல்யாண திட்டத்தின் கீழ் மின்மோட்டார்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு துறை மூலம் வாழ்க்கை தர மேம்பாட்டுக்கு ரூ.29 ஆயிரத்து 208 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் வசதிக்காக அரசு படாவர பந்து என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை மேம்படுத்தி அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷீரஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசின் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை, மானியம் செலுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் மானியங்களும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story