அனுமதி பெற்ற குவாரிகளில் அதிகரித்து வரும் விதிமீறல்கள் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலை
விருதுநகர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று செயல்பட்டு வரும் குவாரிகளில் விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையே நீடிக்கிறது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் குவாரிகளுக்கும், கண்மாய் மற்றும் ஓடை பகுதிகளில் சவுடு மண் குவாரிகளுக்கும், தனியார் நிலங்களில் மண் அள்ளுவதற்கும் மற்றும் கல் குவாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் கனிம வளத்துறை ஆய்வுக்கு பின்னர் அனுமதி வழங்கி வருகிறது. இவ்வாறு அனுமதி வழங்கும் போதே பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. நிபந்தனைகளை மீறி செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கைப்படுகிறது. மேலும் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் போதே குவாரி செயல்படும் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பொது அறிவிப்பு வெளியிட்டு ஆட்சேபனைகள் ஏதும் இல்லாத நிலையில் தான் உரிமம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் பெரும்பாலான குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் கிராமப்பகுதிகளில் நிலத்தடிநீர் ஆதாரம், விவசாயம், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேரடியாகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போதும் புகார் மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்படும் ஒப்புகை சீட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது. இதனால் பல சந்தர்ப்பங்களில் கிராம மக்கள் நடவடிக்கை கோரி போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது.
குவாரிகளில் நடைபெறும் விதிமீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த பொதுநல வழக்கு விசாரணையின்போது மதுரை ஐகோர்ட்டு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது. ஆனால் சமீப காலமாக மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையில் திருப்தி அடையாத மதுரை ஐகோர்ட்டு, நீதித்துறை அதிகாரியின் மூலமாக ஆய்வறிக்கை தர உத்தரவிடும் நிலை ஏற்படுகிறது.
குண்டாற்று பகுதியில் இருந்து வரும் விதிமீறல் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட நீதிபதியின் அறிக்கை, மாவட்ட நிர்வாகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக கூறி அதனை ஏற்க மறுத்து வக்கீல் கமிஷனரை நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குவாரி விதிமீறல் தொடர்பாக பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யாதவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனரை நியமிக்குமாறு முறையிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை ஏற்படுவதற்கு காரணமே விதிமீறல் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததும், உரிய முறையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படாததும் தான். மேலும் பொதுநல வழக்கு தாக்கல் செய்து உரிய பரிகாரம் கிடைக்கும் வரையில் ஏற்படும் கால தாமதத்தால் குவாரிகளில் விதிமீறல்களால் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் செயல்படும் கல் குவாரி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கலெக்டர் நேரில் ஆய்வு நடத்திய நிலையில், மனுதாரரின் தரப்பில் வக்கீல் கமிஷனரை நியமிக்க கோரி ஐகோர்ட்டில் மேல்முறையிடு செய்யப்போவதாக தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், உரிய அனுமதி பெற்று செயல்படும் குவாரிகளில் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் வரும் பட்சத்தில் அந்த மனுக்கள் மீது தாமதம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு உரிய எடுக்கப்பட்டால்தான் இம்மாதிரியான தேவையற்ற பிரச்சினைகளையும், பாதிப்புகளையும் தவிர்க்க வாய்ப்பு ஏற்படும்.
எனவே மாவட்ட நிர்வாகம் இனியாவது குவாரி விதிமீறல்கள் தொடர்பாக கனிமவளத்துறை மீது உரிய நடவடிக்கை எடுத்து, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.