பட்டாசு தொழிலை காப்பாற்றக்கோரி தொடர் போராட்டம் சிவகாசியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்


பட்டாசு தொழிலை காப்பாற்றக்கோரி தொடர் போராட்டம் சிவகாசியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 Feb 2019 4:30 AM IST (Updated: 7 Feb 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலை காப்பாற்றக்கோரி தொடர் போராட்டம் நடத்துவது என்று பட்டாசு மற்றும் அதனை சார்ந்த தொழிலில் தொடர்புடையவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிவகாசி,

பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது என்றும், பசுமை பட்டாசுகள் தான் தயாரிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் கடந்த நவம்பர் மாதம் 13–ந்தேதி முதல் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பட்டாசு ஆலைகள் பூட்டிக் கிடக்கிறது. இதனால் இந்த தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் உள்பட 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசுக்கு விதித்த கட்டுபாடுகளை நீக்க கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், வேதிப்பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்கள், பட்டாசுகளை கொண்டு செல்லும் லாரி நிறுவனங்கள், வர்த்தக சங்கம் மற்றும் ஜே.சி.ஐ, லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்டாசு உறபத்தியாளர்களில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்த தொழிலை எவ்வாறு மீட்டு எடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

அதன் பின்னர் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் தலைவர் ராஜாசந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளுக்கு விதித்துள்ள தடையை உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் சுற்றுச்சூழல் அமைச்சகம் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருள் குறித்து தாக்கல் செய்த அபிடவிட்டை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலை காப்பாற்றக் கோரி நடைபெறும் இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள். கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பட்டாசு விற்பனையாளர் சங்க தலைவர் இளங்கோவன், சரக்கு லாரி சங்கம் நாகராஜன், பிரவின் ராஜா, சி.ஐ.டி.யூ. தேவா, பட்டாசு விற்பனையாளர்கள் பிரதிநிதி சங்கம் ஆனந்த கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story