‘இந்தியாவில் 7 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு’ கருத்தரங்கில் தகவல்
இந்தியாவில் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கில் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மதுரை,
மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைமை பல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜிப்ரீல் வரவேற்றார். புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கிருஷ்ணகுமார், கிருஷ்ணகுமார் ரத்தினம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கூறியதாவது:–
சாலை விபத்து, தற்கொலை உள்ளிட்டவை காரணமாகவும், எய்ட்ஸ், காசநோய் உள்ளிட்ட நோய் பாதிப்பாலும் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். புற்றுநோயை ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்நோயை ஒழிப்பதற்கு ஒரு கூட்டு முயற்சி தேவை. இது சாதாரண நோய் என்றும், பணக்கார நாடுகளில் தான் வரும் என்ற நிலை மாறி அனைத்து வயதினரையும் தாக்கக்கூடிய ஒரு நிலை உள்ளது. வாயின் உட்பகுதியில் புண், உணர்ச்சி இல்லாமல் இருத்தல், வலியின்மை, கூர்மையான பற்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமே தவிர, தானாக முன்வந்து டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகள் உட்கொள்ளக்கூடாது.
புற்றுநோய் கட்டிகளுக்கு வலி அவ்வளவாக தெரியாது. 90 சதவீதம் நோய் மனிதர்களின் பழக்கவழக்க முறைகளால் வருகிறது. 10 சதவீதம் மட்டுமே பரம்பரையினால் வருகிறது. இந்நோய் குறித்த வெளிப்படை பேச்சுகள் தேவை. 30 சதவீதம் புகையிலை மற்றும் புகைப்பிடித்தல் காரணமாக நோய் வருகிறது. மேலும் கொழுப்பு உள்ள உணவு பொருட்கள், தொடர்ச்சியாக மது அருந்துதல், குட்கா போன்ற போதை பொருட்களை உட்கொள்வதாலும் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. நோயின் தன்மை எப்படி இருந்தாலும் சிகிச்சையை நம்பிக்கையுடன் ஏற்கும் துணிவு வேண்டும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அவசியம். நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இந்திய பல் மருத்துவ சங்க திருமங்கலம் கிளை இணைச் செயலாளர் மணிகண்டன், சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் தன்வீர் முகமது உள்ளிட்டோரும் பேசினர். இந்த கருத்தரங்கில் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.