உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உழவர் சந்தைகளுக்கு தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு - அதிகாரி தகவல்
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உழவர்சந்தைகளுக்கு தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என அதிகாரி தகவல் தெரிவித்தார்.
திருப்பூர்,
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உழவர்சந்தைகளுக்கு தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்று துணை இயக்குனர் (வேளாண்வணிகம்) பழனிசாமி தெரிவித்தார்
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தையும், புதிய பஸ்நிலையம் அருகே வடக்கு உழவர் சந்தையும் என்று 2 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. தெற்கு உழவர்சந்தையில் தினசரி சுமார் 150 டன் காய்கறிகளும், வடக்கு உழவர்சந்தையில் சுமார் 45 டன் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த 2 உழவர் சந்தைகளிலும் சுமார் 1,000 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு ஒதுக்க கடைகள் இல்லை. மேலும் விவசாயிகள் பலர் உழவர்சந்தையில் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் உள்கட்டமைப்பு வசதிக்காக ஒவ்வொரு உழவர் சந்தைக்கும் தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து துணை இயக்குனர் (வேளாண்வணிகம்) பழனிசாமி கூறியதாவது:-
திருப்பூர் உழவர்சந்தைகளில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து உள்ளார்கள். அவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. சந்தைகளின் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் அரசு தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த தொகையை கொண்டு உழவர்சந்தைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி கொள்ளலாம். உழவர் சந்தையின் உட்பகுதியில் உள்ள காலி இடங்களில் தேவையான கட்டிடங்களை கட்டிக்கொள்ளலாம். மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, அலுவலகத்துக்கு தேவையான கணினி, தேவையான இடங்களில் மின் இணைப்புகள், மின்னணு தராசு, பாதாள சாக்கடை, காங்கிரீட் தரைதளம் போன்றவற்றை அமைத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story