புதுச்சேரி எம்.பி. தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் ஐ.என்.டியு.சி. விருப்பம்
புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று ஐ.என்.டி.யு.சி. விருப்பம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
ஐ.என்.டியு.சி.யுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் செயற்குழு கூட்டம் ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புதுவை மாநில ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் இணைக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
செயற்குழுவில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஐ.என்.டி.யு.சி. பணி மற்றும் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பெருமையும், புகழையும் காத்து, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு உறுதுணையாக தேசத்திற்கு பணியாற்றுவதற்காக இந்திராகாந்தியின் மறுஉருவமான பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமித்தற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பது. பொறுப்பினை அளித்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது.
* வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல்காந்தி போட்டியிட கேட்டுக்கொள்வது. வருங்கால பிரதமராக ராகுல்காந்தியை அரியணையில் அமர்த்துவது புதுவைக்கு மட்டுமல்ல தென்னிந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும்.
* புதுவை வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு புதுவை மாநில ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநிலம் முழுவதும் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்வது.
* புதுவை மாநிலத்தின் புறநகர் பகுதியான தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, நெட்டப்பாக்கம், ஊசுடு, தொண்டமாநத்தம், கரசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து, சம்பளம் இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் மறுவாழ்வுக்கு விடியல் கண்டிட ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நிர்வாகிகள் புதுவை மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றிபெற செய்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.