திருச்செந்தூர் அருகே பரபரப்பு கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரிக்கை


திருச்செந்தூர் அருகே பரபரப்பு கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்  தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2019 10:15 PM GMT (Updated: 7 Feb 2019 12:17 PM GMT)

திருச்செந்தூர் அருகே தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல் மின் நிலையமும், கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் அமைப்பதற்காக, கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கப்படுகிறது.

இதனால் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் கடல் அரிப்பு ஏற்படுவதாகவும், எனவே அங்கு கடலில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும். கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று முதல் ஆலந்தலையில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

கடலில் இறங்கி போராட்டம்

இதனால் மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்க செல்லாமல், தங்களது படகுகளில் கருப்பு கொடி ஏற்றி, கடற்கரையில் வரிசையாக நிறுத்தி இருந்தனர். காலையில் மீனவர்கள் திடீரென்று கடலில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ‌ஷங்களை எழுப்பினர்.

மேலும், கடற்கரையில் பெண்கள் கைகோர்த்து மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. பின்னர் அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

தூண்டில் வளைவு பாலம்

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், ஆலந்தலையில் பல ஆண்டுகளாக கடல் அரிப்பு உள்ளது. தற்போது கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் அமைப்பதால், ஆலந்தலையில் கடல் அரிப்பு அதிகமாகி, கடற்கரையோர பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.

கடந்த 2002–ம் ஆண்டு இங்கு தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் ரூ.48 கோடி செலவில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எனவே ஆலந்தலையில் தூண்டில் வளைவு பாலத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story