தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பயிற்சி வருவாய் அலுவலர் வீரப்பன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தொடங்கி வைத்தார்.
பயிற்சிநாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கான வாக்குப்பதிவு எந்திரம் குறித்த பயிற்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். டெல்லியில் பயிற்சி பெற்ற தலைமை பயிற்சியாளர்கள் ஜான்சன் தேவசகாயம், முருகானந்தம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
ஒப்புகை சீட்டு எந்திரம்பயிற்சியில், தற்போது எம்.3 வகை நவீன தொழில்நுட்பம் கொண்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த எந்திரங்களில் 24 வாக்குச்சீட்டு பொருத்தும் எந்திரங்களை இணைக்க முடியும். இதனால் 384 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டாலும் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியும். இதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் முதல்நிலை பரிசோதனை முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதே போன்று ஒப்புகை சீட்டு காண்பிக்கும் எந்திரமும் பொருத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பெற்ற மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் நாளை (சனிக்கிழமை) முதல் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன.