நாடாளுமன்ற தேர்தலையொட்டி 13 தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் கலெக்டர் ராமன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலையொட்டி 13 தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 7 Feb 2019 11:00 PM GMT (Updated: 7 Feb 2019 1:36 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வது (விவிபேட்) குறித்து விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த தொகுதி அளவிலான பயிற்றுனர்கள் மற்றும் விளக்க அலுவலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சி வகுப்பை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 4 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து அங்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்திட வேண்டும். இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் 6 முதல் 7 குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். அதில் 5 பணியாளர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வாகனம் ஏற்பாடு செய்திட வேண்டும். ஒரு தொகுதிக்கு 7 வாகனங்கள் வீதம் 13 தொகுதிகளுக்கு 91 வாகனங்கள் இருத்தல் அவசியமாகும்.

மாதிரி வாக்குச்சாவடியை அரசு அலுவலகம் அல்லது சமுதாய கூடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். தனியார் இடங்களில் நடத்தக்கூடாது. பணி முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை தாலுகா அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு குறித்து ஒரு தொகுதிக்கு 10 பேர் வீதம் 130 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் மற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்கு பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில், தேர்தல் தாசில்தார் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story