பணியில் சேர்ந்த 2 மாதத்தில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பணியில் சேர்ந்த 2 மாதத்தில் கால்நடை டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோளிங்கர்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
சோளிங்கரை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஸ்ரீமாங்காளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சிவா (வயது 30). இவர், கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாலாபுரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்தார். அதை தொடர்ந்து சில நாட்களாக சிவா தனது பெற்றோரிடம் பணிச்சுமை அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவா நேற்று சொந்த ஊரில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது உறவினர்கள் பணிச்சுமை அதிகரிப்பால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் சோளிங்கர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிவாவின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.