கூந்தன்குளம் சரணாலயத்தில் 57 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு


கூந்தன்குளம் சரணாலயத்தில் 57 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2019 3:30 AM IST (Updated: 7 Feb 2019 7:59 PM IST)
t-max-icont-min-icon

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் 57 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

நெல்லை, 

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் 57 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

கணக்கெடுப்பு பணி 

வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும். இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்திலும் இந்த பணி நேற்று நடந்தது.

நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் அதை சுற்றி உள்ள காடன்குளம், விஜயநாராயணம், ராமகிருஷ்ணாபுரம், கழுவூர் ஆகிய ஊர்களில் உள்ள குளங்கள், திருப்புடைமருதூர் பறவைகள் பாதுகாப்பகத்திலும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது.

தொலைநோக்கி மூலம்... 

கூந்தன்குளம் பகுதி கணக்கெடுப்பு பணியில் நெல்லை தலைமை வன பாதுகாவலர் டின்கர்குமார், நாகர்கோவில் அரசு ரப்பர் கழக தலைமை வன பாதுகாவலர் வேணுபிரசாத், நெல்லை மாவட்ட வன அலுவலர் திருமால், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) ஹேமலதா, வனச்சரகர் கருப்பையா, உயிரியலாளர் கந்தசாமி, வனக்காப்பாளர் மதியழகன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பணியில் ஒவ்வொரு குளத்துக்கும் தலா 7 பேர் வீதம் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். பறவைகள் குறித்த கேயேடுகள், ஜி.பி.எஸ். கருவி மற்றும் தொலைநோக்கி ஆகியவை மூலம் பறவை இனங்கள் அறியப்பட்டன.

பிளமிங்கோ பறவைகள் 

இந்த கணக்கெடுப்பின்போது ஏராளமான வெளிநாட்டு பறவைகள் கண்டறியப்பட்டன. பூ நாரை எனப்படும் பிளமிங்கோ, வரித்தலை வாத்து, கோட்டல் பிளவர், கெண்டில் பிளவர், டோண், உள்ளான் ஆகிய பறவைகளும், கூந்தன்குளத்தில் கூழைக்கடா, செங்கால் நாரை, நீர்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், ஆட்காட்டி ஆகிய பறவைகள் கூடு கட்டி முட்டையிட்டு தற்போது குஞ்சுகள் பொரித்து உள்ளன.

கூந்தன்குளம் கிராமத்தில் பிற இடங்களில் உள்ள மரங்களில் பறவைகள் தற்போது கூடு கட்டி முட்டையிட தயாராகி வருகின்றன.

57 பறவை இனங்கள் 

இந்த ஆண்டு புதிதாக கீழ கழுவூர் குளத்தில் கூழைக்கடா பறவைகள் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து உள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கூந்தன்குளம் உள்ளிட்ட பகுதியில் அனைத்து குளங்களிலும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் பறவைகள் எண்ணிக்கையும் அதிகளவு காணப்பட்டது. ஒரு நாள் கணக்கெடுப்பில் மொத்தம் 32 வகையான நீர்ப்பறவைகளும், 25 வகையான நிலவாழ் பறவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன’’ என்றனர்.

Next Story