திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ‘திடீர்’ முற்றுகை தேர்தலில் ஓட்டு போட மாட்டோம் எனவும் எச்சரிக்கை
திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தேர்தலில் ஓட்டு போடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ராமசாமி நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடை திறக்கப்படுவதற்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை இங்கு வரக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த டாஸ்மாக் கடை அங்கு திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சில மது பிரியர்கள் போதையில் பெண்களை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி நகர், கீழ்நாச்சிப்பட்டு, நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட பலர் நேற்று பகல் 11 மணியளவில் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.
இதையடுத்து அவர்கள் கடை முன்பு அமர்ந்து கடையை மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் அங்கேயே அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அங்கு வருவாய்த்துறையினர் வந்தனர். அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்னதாக பொதுமக்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த டாஸ்மாக் கடையால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பெண்கள், குழந்தைகள் இந்த வழியாக நடந்து செல்ல அஞ்சுகின்றனர். இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும். இல்லையென்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் யாரும் ஓட்டு போட மாட்டோம்’ என்றனர்.
பொதுமக்களின் போராட்டத்தினால் இந்த டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட வில்லை. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.