அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி,
சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், காளைகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள், காளைகள் நிறுத்துவதற்கான இடங்கள் போன்றவற்றில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், அரசு பல்வேறு துறை அதிகாரிகள் குழுவுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி வழங்குவது, ஆம்புலன்ஸ் வசதிகள் தொடர்பாக டாக்டர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதி, நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு குழுவினருடன் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன’ என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story