திருப்போரூர் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை


திருப்போரூர் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 8 Feb 2019 4:15 AM IST (Updated: 7 Feb 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கீரப்பாக்கம் கிராமம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த நிலையில் தண்டபாணி தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கீரப்பாக்கம் ஆறாம் கல்குவாரி அருகே தண்டபாணி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காயார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் காயார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டம் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தண்டபாணிக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மனைவி தூண்டுதலின் பேரில் யாரேனும் தண்டபாணியை கொலை செய்திருப்பார்களா? கள்ளத்தொடர்பு ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொலை சம்பந்தமாக மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டம் தலைமையில் போலீசார் தண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story